இதுவரை நடந்த தேர்தல்களைவிட வடக்கு, கிழக்கில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பை சர்வதேச சமூகம் உன்னிப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகத் திருமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூலை 23ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, திருகோணமலை பட்டினமும் சூழலும், சேருவில ஆகிய பிரதேசசபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்றது.
இப்பிரதேச சபைகளுக்குப் போட்டியிடும் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி கருத்து வெளியிடுகையிலேயே துரைரெட்ண சிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
துரைரெட்ணசிங்கம் மேலும் பேசுகையில்;
குச்சவெளி பிரதேச சபைக்கு கடைசியாக நடத்தப்பட்ட தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 142 வாக்குகளைக் குறைவாகப் பெற்றதனால் சபையின் நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியாமற்போனது. எதிர்வரும் தேர்தலில் முழுமூச்சுடன் உழைத்து குச்சவெளி பிரதேச சபையின் நிர்வாகத்தை தமிழரசுக் கட்சி கைப்பற்ற வேண்டும்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கான தேர்தல் திருகோணமலைத் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைகின்றது. தற்போதைய நிலைவரத்தில் தமிழினத்திற்கு மாற்றான சக்திகளின் மேய்ச்சல் தரையாக திருமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை பகுதி காணப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இப்பிரதேச சபையின் நிர்வாகத்தை மீண்டும் கைப்பற்றுவதன் மூலமே இது சாத்தியமானதாகும்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவுடன் செயல்பட வேண்டும். தளம்பல் நிலை ஏற்படுவதற்கு இடமளிக்கப்படக்கூடாது. சேருவில பிரதேச சபைக்கான தேர்தலிலும் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்றது.
கடந்த தடவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கட்சி உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார். இம்முறையும் தமிழரசுக் கட்சி அங்கு போட்டியிடுகின்றது.
தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளக்கூடாது. ஆணையாளர் விமர்சித்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் பிரசாரத் துண்டுப் பிரசுரங்களும் கட்சிக் கொள்கைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்படவேண்டும்.
பரம்பரையாக தமிழ் மக்கள் வாழும் தாயகம் துண்டிக்கப்படாது பாதுகாக்கப்படவேண்டும். எம் தலைவிதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு கொண்ட தீர்வையே தமிழ் மக்கள் இன்று வலியுறுத்தி வருகின்றார்கள்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்கள் இந்த நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதியாக எடுத்துக் கூற வேண்டும்' என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment