Friday, May 20, 2011

பிரிகேடியர் பால்ராஜ்- 18


எப்போதுமே சவாலான சண்டைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொள்வதும் இறுக்கமாக போர்க்களங்களில் செயற்பட்டு வெல்வதும் இவருடைய குணாதிசயங்களில் ஒன்று. அதன் பின்னர் 1992 ன் ஆரம்பகாலப்பகுதியில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழித்த தாக்குதல், அதனைத் தொடர்ந்து 1992 ன் பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் 150 காவலரண்களை அழித்த தாக்குதல் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார். குறிப்பாக 1992 ம் ஆண்டு பயிற்சித் தேவைகளுக்காக தலைவரிடம் ரவைகள் வேண்டும் என தளபதிகள் கேட்டபோது “சண்டைகளுக்கு மட்டுமே ரவைகள் இருக்கு, இப்ப உங்களுக்கு தேவையான ரவைகள் இராணுவத்திட்ட இருக்கு, அங்க போய் எடுங்கோ என கூறினார்” இதுவே பலாலி – வளலாயில் இருந்த 150 காவலரண்களை அழித்து ஒன்றறை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரவைகள் பல ஆயுத, வெடிபொருட்களையும் கைப்பற்றி அடிப்படையானது.

காவலரண்களை உடைத்துக் கொண்டு உட்சென்று பின்பக்கத்தால் தாக்குதலை நடாத்தும் முறை, தரையால் படைகளை நகர்த்தும் சமநேரத்தில் கடலாலும் படைகளை நகர்த்தி எதிரியின் விநியோகம், ஆதரவுப்படைகளை அனுப்பும் வழிகளை தடுத்தல் கட்டளைமையங்கள் தகர்த்தல், தரைவழித் தாக்குதல் படையணிகள் உள் நுழைவதற்காக காவலரண்களை பின்பக்கத்தால் தகர்த்து பாதையேற்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஈரூடக தாக்குதல் முறை மூலம் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அழித்தொழிக்க முடியும் என்ற உத்தியை தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தினார்.

No comments:

Post a Comment