Friday, May 20, 2011

பிரிகேடியர் பால்ராஜ்- 5


அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார். முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார். 1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது.

தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர்.

No comments:

Post a Comment