Friday, May 20, 2011

பிரிகேடியர் பால்ராஜ்- 8


இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது. பால்ராஐ அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது “மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார். அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து - திட்டமிட்டுத் தாக்குவது வழமை. எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து”.

என்று கூறியுள்ளார். இந்திய கொமாண்டோக்களின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடையம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார்.

No comments:

Post a Comment