Sunday, July 31, 2011

மில்லரின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலைக் கட்டடம் இடிக்கப்படுகிறது


தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற் தற்கொலைப் போராளி கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்திருந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் கட்டடம் யாழ். ஆளுநரின் பணிப்பின் பேரில் தற்போது இடித்து அகற்றப்படுகிறது.
இந்தப் பாடசாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண ஆளுநரும் 2006 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுவரை யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாகக் கடமையாற்றியவரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, விடுதலைப்புலிகளை நினைவுகூரத்தக்க வகையில் அமைந்துள்ள சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கூற்றுக்கமைவாக, இவ்வாறான கட்டடங்கள் பாடசாலையில் இருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக இடித்து அகற்றுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
தாக்குதலில் சேதமடைந்த பாடசாலைக் கட்டடம் மில்லரின் நினைவாக அப்படியே இருந்தது.
தற்போது ஆளுநரின் உத்தரவுக்கு அமைய ஆளுநரினால் வழங்கப்பட்ட நிதியில் மேற்படி கட்டடம் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் நேற்று முன்தினம் முதல் இடிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, யாழ். குடாநாட்டிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னம் எதுவுமே இருக்கக் கூடாது என்பதற்காக மாவீரர் மயானங்கள், நினைவுத் தூபிகள்,  கல்லறைகள் மற்றும் நினைவுப் பூங்காக்கள் என்பன  இடித்தழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தடுமாறும் சிவாஜிலிங்கமும்,தடுமாற போகும் தமிழ்தேசிய கூட்டமைப்பும்?

தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று வடக்கு கிழக்கில் தமிழர் இருப்பை உறுதி செய்ததுஇது யாவரும் அறிந்ததே.தேர்தல் காலப்பகுதியில் அதாவது தேர்தலுக்கு முன்பு சில மாற்றங்கள் நடந்தன அதாவது முன்பு பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட "தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பு" என்ற கட்சி கலைக்கப்பட்டு அவருடன் இருந்த எம்பி சிறிகாந்தாவும் அவர்கள் முன்பு அங்கத்துவம் வகித்த ரெலோவுடன் இணைந்துகொண்டனர்.இதன் பின்பு வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் தேசிய மாநாட்டில் உரைநிகழ்த்திய சிவாஜிலிங்கம் சொன்னார் "நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே கொள்கையுடன் சேர்ந்து நமக்கான அரசியல் உரிமைகளை பெறவேண்டும்",இதையும் நாம் மறந்துவிடவில்லை.தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு "தேசியம்,தாயகம் என்பவற்றுடன் முள்ளிவாய்க்கால் அவலங்கள்,மீள்குடியேற்றம்,முன்னாள் போராளிகளின் விடுதலைக்கு உதவுதல்"என்ற கோரிக்கைகளுடன் களத்தில் இறங்கினார்கள் மக்களோ அமோக ஆதரவுடன் வெற்றி பெற செய்தார்கள்,ஆனால் இன்றோ நடப்பது என்ன?சிவாஜிலிங்கம் இப்போ தடுமாறுகின்றார்,இதோ அவரின் கோரிக்கைகள் 
 கடந்த 28.07.2011 திகதியிட்டு வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் - 2011 எனத் தலைப்பிட்டு, வல்வெட்டித்துறை நலன்விரும்பிகள் என சிவாஜிலிங்கத்தின் தலைமையில் 11 பேர் ஒப்பமிட்டு, வல்வெட்டித்துறையில் இருந்து தொலைநகல் மூலம் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை.சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு :
1. முன்னுரிமை வாக்கின் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு மட்டுமே அன்றி தலைவர் உபதலைவர் தெரிவுக்கு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
2. நியமனப்பத்திரம் தயாரித்த வேளை 26.01.2011 ல் திரு சுமந்திரன் பா.உ முன்னிலையில் தங்கள் திரு.அனந்தராஜாவின் கேள்விக்கு பதிலளிக்கையில் முன்னுரிமை வாக்குகளை மட்டும் கருத்தில் கொள்ளாது வேறு பல அம்சங்களும் சேர்த்தே பரிசீலிக்கப்படும் எனப் பதிலளித்தமையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
3. இந் நிலையில் திரு.ந. அனந்தராஜ் உள்ளிட்ட எமது உறுப்பினர்கள் மத்தியில் சுழற்சி முறையில் தலைவர், உப தலைவர் பதவிகள் பகிர்ந்து வகிக்கும் திட்டத்தினை அமுல்படுத்த ஒரு மனதாக தீர்மானித்துள்ளோம்.
4.இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களும் போட்டியிட்ட வேட்பாளர்களும் மற்றும் வல்வெட்டித்துறை நலன் விரும்பிகளும் ஒருமித்த கருத்துடன் சிவாஜிலிங்கம் முதல் ஒரு ஆண்டும் அனந்தராஜ் அடுத்த இரு ஆண்டுகளும் குலநாயகம் ஒரு ஆண்டும் தலைவர் பதவியை வகிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
5. உப தலைவார் பதவி சதீஸ் இராமச்சந்திரன் (தெரிவாகதவர்)  ஜெயராஜ், மயூரன், ஜெயதீஸ் ஆகியோருக்கிடையில் 4 ஆண்டுகளும் பகிர்ந்து அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
6. 4ம்,5ம் பந்திகளில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்த ஏதுவாகவும் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்கு கால அவகாசத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் தற்காலிக ஏற்பாடாக தலைவராக க.ஜெயராஜா வையும் உப தலைவராக க.சதீஸ் ஐம் நியமித்து தேர்தல் ஆனையாளருக்கு அறிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
7. 6ம் பந்தியில் குறிப்பிட்டுள்ள குறைந்த பட்ச கோரிக்கைகளையும் ஏற்கபடாது விடத்தில் எமது கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் நகரசபை நிர்வாகத்துடன் ஒத்துழைக்காது செயற்படுவதன் மூலம் நகரசபை செயற்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.
என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அவலங்களை முன்னிறுத்தி வாக்குகேட்ட சிவாஜிலிங்கம் தற்பொழுது பதவிக்காக ஆசைப்படுகிறாரா?  இந்த நேரத்தில் இன்னுமொன்றையும் குறிப்பிட வேண்டும் கூட்டமைப்பு எம்பியான சுமந்திரனும் அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் தெரிவித்த கருத்துக்களும் அண்மையில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது,ஆனால் இவரது கருத்துக்களுக்கு இன்றுவரை கூட்டமைப்பு உயர்மட்ட உறுப்பினர்களால் உரிய நடவடிக்கைகளோ அல்லது மக்களுக்கான தெளிவு படுத்தல்களோ இல்லை என்பதே கவலையான செய்தி.ஒரு எம்பி கூறியிருந்தார் "சுமந்திரனின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்தே தவிர கூட்டமைப்பின் கருத்தல்ல" அப்படியாயின் சுமந்திரன் கூட்டமைப்பு உறுப்பினர் இல்லையா?அல்லது அவரும் கூட்டமைப்புக்கு கட்டுப்படவில்லையா? எனவே இவற்றுக்கு எல்லாம் நாம் விடைகான  கூட்டமைப்பு தலைவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்போகும் கருத்துக்கள்/எடுக்கப்போகும் நடவடிக்கைகள்தான் பதில் சொல்லும்.


Sunday, July 24, 2011

தமிழீழம் தொடர்பாக முகப்புத்தகத்தில் (Facebook) கணக்கு வைத்திருப்பவர்களின் முக்கிய கவனத்திற்க்கு!


ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம்.
இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்.

இலங்கை உளவுப் பிரிவினர் ஈழ ஆதரவாளர்கள் போல் தன்னை காட்டிக் கொண்டு பெண்கள் பெயரிலும் தலைவர் பெயரிலும் பேஸ்புக் உள்ளே வருகின்றார்கள் பின்பு உங்கள் விபரங்கள் அறிந்த பின்னர் நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை கைது செய்வார்கள் பின்பு உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
இலங்கை தமிழர்கள் பேஸ்புக்கில் உங்களுடைய முகவரியை போலியானதாக பதிவு செய்யவும்.
இதேவேளை உங்கள் பேஸ்புக் கணக்கில் பொய்யான பெயரோ அல்லது பொய்யான முகவரியோ இட்டிருந்தால் அல்லது நீங்கள் பேஸ்புக்கில் முகம் தெரியாத நண்பர்களுடன் உரையாடும் போது உங்கள் தொடர்பான உண்மையான பெயரையோ முகவரியையோ தெரிவிக்காமல் இருந்தால் எந்தவிதமான பிரச்சினையும் வராது.

Wednesday, July 13, 2011

யாகூ (yahoo) இணையத்தினூடாக 88 இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக் கணிப்பு! உங்கள் வாக்கை உடனடியாக அளியுங்கள்.


இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக இன்று நடைபெற்று வருகிறது.
இக் கருத்துக்கணிப்பில் நாங்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Today's Poll
Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka?

1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)

2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)

3. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பவும். (Send them home)

4. எனக்குத் தெரியாது. (I don't know)

போன்ற விடையங்களே இக்கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக் கருத்துகணிப்பானது யாகூ இணையத்தில் ஒரு சிறிய பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவான தமிழர்களின் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.

இதன் காரணமாக துரதிஸ்டவசமாக இந்த நிமிடம் வரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்ற கருத்திற்கே அதிகமான வாக்காக 82% காணப்படுகிறது.

எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/  எனும் பகுதியை அழுத்தி அதனூடாக அக்கருத்துக்கணிப்பில் இலக்கம் இரண்டில் உள்ள Negotiate with Australia or Canada என்பதற்கு உங்கள் வாக்குகளை அளித்து நடுக்கடலில் தத்தளிக்கும் எமது அன்பு உறவுகளை விரைந்து காப்பாற்றுங்கள்.
தனி நபர்களாகவும், நீங்கள் சார்ந்த அமைப்புக்கள் சார்ந்தும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் வேற்றினத்தவர்களுக்கும் தெரியப்படுத்தி இக்கருத்துக்கணிப்பில் Negotiate with Australia or Canada எனும் பகுதிக்கு வாக்குகளை அதிகரிக்க செய்து உயிர்த் தஞ்சம் கோரி நிற்கும் எம் தாயக உறவுகளுக்கு ஒரு நல்ல வாழ்வை அளியுங்கள்.

நேற்றைய தினம் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினால் "உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவ உங்கள் அமைப்புக்கள் சார்ந்து விரைந்து செயற்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததையும், அதன் காரணமாக பல அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் என பலரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கத்தினூடாக அக்கப்பலில் இருக்கும் உறவுகளுடன் உரையாடி அவர்கள் தொடர்பான விபரங்களை பெற்ருக்கொண்டதோடு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Friday, July 8, 2011

யூலை 23 உள்ளாட்சித் தேர்தலில் த,தே,கூட்டமைப்பை ஆதரியுங்கள்

சிங்கள அரசினால் தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் எதிர்வரும் யூலை 23 இல் நடைபெற இருக்கிறது. வட - கிழக்கில் மொத்தம் 25 உள்ளாட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் 

(1) வல்வெட்டித்துறை நகர சபை (2) பருத்தித்துறை நகர சபை (3) சாவகச்சேரி நகர சபை (4) காரைநகர் பிரதேச சபை (5) ஊர்காவத்துறை பிரதேச சபை
(6) நெடுந்தீவு பிரதேச சபை (7) வேலணை பிரதேச சபை (8) வலிகாமம் மேற்கு பிரதேச சபை (9) வலிகாமம் வடக்கு பிரதேச சபை (10) வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை (11) வலிகாமம் தெற்கு பிரதேச சபை (12) வலிகாமம் கிழக்கு பிரதேச சபை (3) வடமராச்சி தென்மேற்கு பிரதேச சபை (14) பருத்தித்துறை பிரதேச சபை (15) சாவகச்சேரி பிரதேச சபை (16) நல்லூர் பிரதேச சபை.

கிளிநொச்சி மாவட்டம் 

(1) பச்சிலைப்பள்ளி பிரதேச சபை (2) கராச்சி பிரதேச சபை (3) பூநகரி பிரதேச சபை.

திருகோணமாலை மாவட்டம்

(1) கந்தளாய் பிரதேச சபை (2) குச்சவெளி பிரதேச சபை (3) திருகோணமலை நகர பிரதேச சபை (4) சேருவில பிரதேச சபை

அம்பாரை மாவட்டம் 

(1) காரைதீவு பிரதேச சபை (2) திருக்கோயில் பிரதேச சபை

கடந்த மார்ச்சு 17 இல் வட - கிழக்கில் உள்ளாட்சி சபைகளுக்கு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 12 சபைகளிலும் வெற்றிபெற்றது. உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்மக்கள் அடித்தள ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க முடியும்.

வட - கிழக்கில் நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பலத்த தோல்வியைச் சந்தித்த ஆளும் கட்சி இந்தத் தேர்தலில் தமிழ்க் கைக்கூலிகளின் ஆதரவோடு எப்படியும் வென்றுவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளது. வடக்கில் தேர்தல் பரப்புரைக்குப் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பஸில் இராசபக்சே, நாமல் இராசபக்சே, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், சுசில்பிரேமஜெயந்த, மைத்திரபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, திஸ்ஸ கரலியத்த, ஜகத் புஸ்பகுமார, மஹிந்தானந்த அளுத்கமகே, துணை அமைசர் ஹிஸ்புல்லா ஆகியோருடன் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்தில் முகாம் இட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிறு (யூலை 03) காலை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பஸில் இராபச்சே "பன்னாட்டுச் சமூகத்துக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் எமது அரசுடன் தான் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான் அது. இதற்காக நாம் உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.

எனவே வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி ஆட்பலம், பணபலம், அதிகார பலம், இராணுவ பலம் ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஆளும் சிங்கள - பவுத்த பேரினவாதிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிய தலையிடியாக இருக்கிறது. "அரசைக் குழப்பும் கட்சிகளாக தெற்கில் ஜேவிபியும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்" இருக்கிறதாக அமைச்சர் பஸில் இராசபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.

வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என்று போர்க்காலத்தில் கூறிய மகிந்த இராசபக்சே இப்போது 13 ஆவது சட்ட திருத்தம் வழங்கும் காணி மற்றும் காவல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.

"யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்கமுடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமின்றி உள்ளகக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருக்கின்றது" என கபே (CaFFE) என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது.

வடக்கும் கிழக்கும் இராணுவ - சிங்கள - பவுத்த மயப்படுத்தல், பண்பாட்டுச் சீரழிவுகள், பொருளாதாரச் சிதைவுகள், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் ததேகூ மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. அதனை முறியடிக்க சிங்கள அரசு கடுமையாகப் பாடுபடுகிறது. அதன் வெளிப்பாடாகவே எப்பாடு பட்டும் வடக்கில் ததேகூட்டமைப்பை தோற்கடித்து உள்ளாட்சி சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு அதிதீவிர முயற்சி செய்கிறது.

யாழ்ப்பாணத்தின் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் கடந்த யூன் 16 ஆம் நாள் நடந்த கூட்டத்தில் சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர் ஆயுதங்களோடு திடீரெனப் புகுந்து இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கியது தெரிந்ததே. யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும். அங்கு சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்க்கை இல்லை என்பதற்கு இந்தத் தாக்குதல் சாட்சி பகருகிறது.

கடந்த தேர்தல்களில் எமது மக்கள் எதற்கும் விலை போக மாட்டார்கள், எந்தப் பயமுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டார்கள் என்பதைத் துலாம்பரமாகக் காட்டியுள்ளார்கள். இந்தத் தேர்தலிலும் எமது மக்கள் சிங்கள - பவத்த இனவாதத்தைக் கக்கும் மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் அதன் தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் செமபாடம் புகட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு காலத்தில் சிங்கள - பவுத்த - இராணுவ மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக வி.புலிகள் காப்பரணாக விளங்கினார்கள். இன்று அந்தப் பொறுப்பு ததேகூ இன்தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. முன்னா நடந்த தேர்தல்களில் ததேகூ இன் வெற்றிக்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் குறிப்பாக கனடிய தமிழ்மக்கள் பாரிய பங்களிப்பைச் செய்துளார்கள். தொடர்ந்து அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்வார்கள் என நம்புகிறோம்.

ததேகூ தோற்கடித்துவிட்டால் தமிழ்மக்களை அடக்கி ஆளுவது எளிதாகிவிடும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு நினைக்கிறது! ததேகூ க்கு எங்கள் ஆதரவு தேவை.
�புலம்பெயர் தமிழ்த் தேசிய நலன் விரும்பிகள்


Wednesday, July 6, 2011

விடுதலைப் புலிகள் மிகத் திறமையான முறையில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் கடைசியில் தோல்வி அடைவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்


தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மிக வெற்றிகரமான சில உளவியல் நடவடிக்கைகள் பற்றி இத்தொடரில் விரிவாகப் பார்த்திருந்தோம்.
அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த உளவியல் நடவடிக்கைகள்.
ஒரு போராட்ட அமைப்பால் இத்தனை தூரம் உளவியல் நடவடிக்கைளை திட்டமிட்டுச் செயற்படுத்த முடியுமா என்கின்றதான ஆச்சரியம் சில மேற்குலக போரியல் ஆய்வாளர்களிடமே காணப்படுகின்றது. அந்த அளவிற்கு உளவியல் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் தமது திறமையை வெளிப்படுத்தி வந்திருந்தார்கள்.
இந்த இடத்தில் பலரிடம் ஒரு கேள்வி இருக்கின்றது.
விடுதலைப் புலிகள் மிகத் திறமையான முறையில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் கடைசியில் தோல்வி அடைவதற்குக் காரணம் என்ன?
உண்மையிலேயே நாம் சற்று நிதானமாக யோசிக்கவேண்டிய கேள்வி. தமிழ் மக்களின் போராட்டப் பாதையில் முக்கியமாக எழுப்பப்படவேண்டிய கேள்வி. நிச்சயம் பதில் காணப்படவேண்டிய கேள்வி.
இந்தக் கேள்விக்கு சரியான பதிலை நாம் உண்மையாகவே காண விரும்பினால், முதலில் எங்களையே நாங்கள் ஒரு ஆரோக்கியமான சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும். அப்படிச் செய்யாது விட்டால் மேலே கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை நிச்சயம் எங்களால் காணமுடியாமலேயே போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
விடுதலைப் புலிகள் மிகத் திறமையான முறையில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் கடைசியில் தோல்வி அடைவதற்கு மூன்று முக்கிய காரணங்களை நாம் பட்டியலிடலாம்.
முதலாவது: விடுதலைப் புலிகளின் முன்நாள் தளபதியான கேணல் கருணா அம்மான்.
இரண்டாவது: சிறிலங்கா இராணுவத்தின் நவீனமுறையிலான உளவியல் நடவடிக்கைகள்.

மூன்றாவது: விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகள்.

இதில் மூன்றாவதாக நான் குறிப்பிட்ட காரணம் பற்றி உங்களில் சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படலாம். விடுதலைப் புலிகள்தான் பல வெற்றிகரமான உளவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக முன்னர் நாம் பார்த்திருந்தோமே. பின்னர் அவர்கள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தின் வெற்றிக்கு வழி வகுத்தாகக் கூற முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் ஒரு வகையில் இந்த ஆபத்து புலிகளின் உளவியல் நடவடிக்கைகயில் நடந்தேறியிருந்தது என்பதுதான் உண்மை.

உளவியல் நடவடிக்கைகள் பற்றிய கற்கைகளில் ஒரு முக்கியமான விடயம் இருக்கின்றது. அதாவது எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, எதிரியை ஒரு மாயைக்குள் வைத்திருக்கும்படியான உளவியல் நடவடிக்கை என்று ஒருவகை நடவடிக்கை இருக்கின்றதல்லவா? எதிரியைக் குறிவைத்து ஒரு தரப்பால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த வகை உளவியல் நடவடிக்கைக்கு, அந்த உளவியல் நடவடிக்கையை மேற்கொள்ளுகின்ற தரப்பே பலியாகிவிடக்கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இது உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயத்தில் ஒரு முக்கியமான பாடம்.

எதிரியைக் குறிவைத்து மேற்கொள்ளப்படுகின்ற உளவியல் நடவடிக்கைக்கு எப்படி நாமே பலியாவது?

இதற்கு, என்னுடைய கல்லுரி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை உதாரணத்திற்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் சென்னையில் காலேஜ் விடுதியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த பொழுது கேரளாவைச் சேர்ந்த ஒரு முதலாம் ஆண்டு மாணவன் புதிதாக விடுதிக்கு வந்திருந்தான். தோற்றத்தில் மிகவும் பலவீனனாகக் காணப்பட்ட அந்த மாணவன் தனக்கு வர்மக்கலை தெரியும் என்று கூறி, வர்மக்கலை நுணுக்கங்கள் சிலவற்றையும் விபரித்துக் கூற ஆரம்பித்தான்.

எதிரியின் களுத்தில் உள்ள ஒரு நரம்பில் தனது விரல்களால் இலேசாகத் தட்டிவிட்டால் போதும் எதிரியின் வாய் ஒரு பக்கம் இழுத்துக்கொண்டுவிடும். பின்னர் வாழ் நாள் முழுவதும் அந்த நபரால் குணமாக முடியாது. தோளில் உள்ள ஒரு நம்பில் குறிபார்த்து இலேசாக அழுத்திவிட்டால் கை இழுத்துக்கொண்டுவிடும். பின்னர் வாழ் நாள் முழுவதும் அந்தக் கை செயற்பட முடியாது- இப்படி பல கதைகள் அந்த மாணவனிடம் இருந்த வர்மக்கலைத் திறமை பற்றி மாணவர்கள் மத்தியில் பரவியிருந்தது.

மிகவும் அமைதியாகக் காணப்பட்ட அந்த மாணவனிடம் வம்பிழுப்பதற்கு எங்களனைவருக்கும் கொஞ்சம் பயம். அவன் விசயத்தில் தலையிடுவதை கூடுமானவரை தவிர்த்தே வந்தோம். ஒரு குறுகிய காலத்திற்குள் எதுவும் செய்யாமலேயே அந்த மாணவன் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு காலேஜ் கொஸ்டலில் வலம்வர ஆரம்பித்துவிட்டான். யாருமே அவனிடம் சண்டைக்குப் போவதில்லை. அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை நட்பாக்கிக்கொள்ள முன்டியடித்தார்கள். அவனை ராக்கிங் செய்வதற்கு அனைவருக்குமே பயம். முதல் வருடம் இவ்வாறு கழிந்தது. இரண்டாம் வருடம் அந்த மாணவன் சீனியர் ஆனதும் அவனுக்கு இன்னும் தலைக்கனம் வர ஆரம்பித்தது. அவனைப் பார்த்து பயந்த மாணவர்களை அந்த மாணவன் வம்பிக்கிழுக்க ஆரம்பித்தான். சிலரை அடிக்கவும் செய்தான். அவனுக்கு வர்மக்கலை தெரியும் என்ற அச்சத்தில் யாருமே அவனைத் திருப்பி அடிக்கத் துணியவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் புதிதாக வந்த மாணவன் ஒருவன் இந்த வர்மக்கலை தெரிந்த ஜம்பவானை ஒரு ராகிங்; பிரச்சனையின் போது போட்டு வாங்கு வாங்கென்று வாங்கி அடித்துத் துவைத்த போதுதான், உண்மையிலேயே அவனுக்கு வர்மக்கலையும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது என்கின்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்தது. எங்கோ புத்தகத்தில் வர்மக்கலை பற்றி ஓரிரண்டு விசயங்களை வாசித்து அறிந்துவைத்துக்கொண்டு ஒரு வருடமாக எங்கள் அனைவரையும் போட்டு ஓட்டி இருக்கின்றான் என்ற விசயம் அனைவருக்கும் தெரியவந்தது. கடுப்பாகிய மாணவர்கள் அவனை போட்டு வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்கள். அதன் பின்னர் அவனை எங்கு கண்டாலும் அவன் தலையில் குறைந்தது ஒரு குட்டாவது குட்டிவிட்டுத்தான் மாணவர்கள் கடந்து செல்வார்கள். இந்த மாணவன் விடயத்தில் உண்மையிலேயே என்ன நடந்ததென்றால், மற்றவர்களை அச்சமூட்டும் நோக்கில் தனக்கு வர்மக்கலை தெரியும் என்று அந்த மாணவன் கதை அளந்திருந்தான் அல்லவா. அந்தக் கதையை ஒரு சந்தர்ப்பத்தில் அந்த குறிப்பிட்ட மாணவனே நம்ப ஆரம்பித்துவிட்டான். மற்றவர்கள் தன்னைக் கண்டு பயப்பட ஆரம்பித்ததும் அந்த அச்சத்தை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த அவன் தனக்கு உண்மையாகவே வர்மக்கலை தெரியாது என்கின்ற உண்மையை மறந்து தனக்கு அது தெரியும் என்று நம்ப ஆரம்பித்ததன் விளைவுதான் அவன் மேற்கொண்ட அந்த உளவியல் நடவடிக்கை தோல்வி அடையக் காரணம்.
விடுதலைப் புலிகள் விடயத்திலும் கிட்டத்தட்ட இதுதான் நடந்திருந்தது. எதிரியை அச்சமூட்டுவதற்காகவென்று விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல உளவியல் நடவடிக்கைகளை ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளே நம்ப ஆரம்பித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம்.

சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள். அந்தப் புத்தகத்தின் பெயர்: நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள். சாள்ஸ் அன்டனி சிறப்புப் படையணிபின் பத்தாண்டு போராட்ட வரலாறு பற்றிய புத்தகம். விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள், போராளிகளின் அனுபவங்கள், புகைப்படங்களைச் சுமந்து வந்த மிகவும் கனதியான அந்தப் புத்தகத்தில் விடுதலைப் புலிகளின் போராட்ட நுனுக்கங்கள், இரகசியங்கள் பல பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளால் மிக வெற்றிகரமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக அனைவராலும் நம்பப்பட்ட சில குறிப்பிட்ட தாக்குதல்கள் உண்மையிலேயே ஓரிருவரின் தனிப்பட்ட நடவடிக்கையினால், அல்லது அதிர்ஷ்டத்தினால், அல்லது எதிரிக்கு ஏற்பட்ட நியாயமற்ற அச்சத்தினாலேயே பெறப்பட்டிருந்தன என்கின்ற உண்மையைக்கூட அந்தப் புத்தகம் வெளிப்படுத்தியிருந்தது. முக்கியமாக எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கோடு போராட்டக் களங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த உளவியல் நடவடிக்கைகள் களமுனைகளில் எப்படியான தாக்கத்தினை எதிரிக்கு ஏற்படுத்தியிருந்தது என்றெல்லாம் விபரித்து இருந்தார்கள்.

~இப்படி இராணுவ இரகசியங்களை பகிரங்கப்படுத்துவது பிற்காலத்தில் புலிகளுக்கு மிகப் பலவீனத்தை ஏற்படுத்திவிடும் அல்லவா| என்று ஒரு மூத்த ஊடகவியலாளர் விடுதலைப் புலிகளின் ஒரு கட்டளைத்தளபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். ~இந்தப் புத்தகத்தை மொழி மாற்றி சிறிலங்காப் புடை வீரர்களுக்கு வினியோகித்தால், உளவியல் ரீதியாக மிகப் பெரிய பலம் அவர்களுக்கு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றதல்லவா? விடுதலைப் புலிகளின் பல பலவீனங்கள் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றனவே. ஒரு போராட்ட அணிக்கு இது நல்லதல்லவே| என்று அக்கறையுடன் அந்த தமிழ் இராணுவ ஆய்வாளர் புலிகளின் அந்த கட்டளைத் தளபதியிடம் கூறியிருந்தார்.

அதற்கு புன்னகையுடன் பதிலளித்த அந்த தளபதி, அடுத்த கட்ட யுத்தத்தில் இப்படியான சண்டைகளெல்லாம் நடக்கச் சந்தர்ப்பம் இல்லை. நேரடிச் சண்டை என்பதே இனிவரும் காலங்களில் நடக்கப்போவதில்லை. இங்கிருந்தபடி பட்டன்களை அழுத்துவதுதான் எமது வேலையாக இனி இருக்கப் போகின்றது. எதிரிகளை அழிப்பதற்கு ஏவுகணைத் தொழில்நுட்பம்தான் இனி வரும் காலங்களில் புலிகளால் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதுதான் நாம் இனிச் செய்யப் போகும் சண்டைகள் என்று அந்தத் தளபதி தெரிவித்தார்.
இதேபோன்று 2005ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வன்னியில் ஒரு தளபதியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, 'எதற்காக சண்டை ஆரம்பமாகவேண்டும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு விரும்புகின்றது? ஒரு சண்டைக்கான அவசரம் என்ன?" என்று நட்பு ரீதியிலான ஒரு கேள்வியை நான் எழுப்பியிருந்தேன். ~நாலாம் கட்ட ஈழ யுத்தம் என்பது வெறும் மூன்று நாட்கள் மாத்திரம்தான் நடைபெறும். இனிமேல் மூன்றுநாட் சண்டைதான்- அதற்குள் அனைத்தும் முடிந்துவிடும். அந்த அளவிற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சண்டைகளுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வைத்திருக்கின்றோம்| என்று நம்பிக்கை ஒளி கண்களில் தெரிய அந்தத் தளபதி கூறியிருந்தார்.

ஆனால் மூன்று வருடங்களையும் கடந்து நடைபெற்ற நான்காம் கட்ட ஈழ யுத்தத்தின் பொழுது விடுதலைப் புலிகளின் தளபதிகள் நம்பிக்கை வெளிப்படுத்திய அளவிற்கான நவீன போரியல் யுக்திகளோ, அல்லது நவீன போரியல் உபகரணங்களோ விடுதலைப் புலிகள் தரப்பில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

கிளிநொச்சியையும் கடந்து சிறிலங்கா படைத் தரப்பு புதுக்குடியிருப்பை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த பொழுது கூட, வன்னியிலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்த விடுதலைப் புலிப்போராளிகளுக்கு ஒரு பெரிய தாக்குதலைச் செய்யும் அளவிற்கான தயார்படுத்தல்களைத் தாம்; கொண்டிருப்பதான நம்பிக்கை மிக மிக அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது.
சண்டைகளின் ஆரம்பத்தின் பொழுது உளவியல் ரீதியாக விடுதலைப் புலிகள் பெற்றிருந்த உற்சாகம், நம்பிக்கை முள்ளிவாய்கால் முடிவிற்கு சில வாரங்கள் முன்னவர் வரை அவர்கள் வசம் காணப்பட்டது.

கிளிநொச்சி தமது கரங்களில் வீழ்ந்ததைத் தொடர்ந்து, சிறிலங்கா படைத் தரப்பிற்கு ஒரு அச்சம் ஏற்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகள் தமது மரபுக் கட்டமைப்புக்களைக் கலைத்துவிட்டு அவர்கள் மிகவும் கைதேர்ந்த கெரில்லா பாணியிலானா போராட்டத்தைக் கைகளில் எடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் படைத் தரப்பிற்கு இருந்தது. ஏனென்றால் கெரில்லாத் தாக்குதல்களில் உலகிலேயே சிறந்த போராளிகள் விடுதலைப் புலிகள். புலிகள் மாத்திரம் கெரில்லாப் போராட்டத்தில் இறங்கிவிட்டால் அவர்களை வெல்லவே முடியாது- அதுவும் வன்னி மண்ணில் புலிகளை வெல்வதென்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பது சிறிலங்காப் படைத் தரப்பிற்கு இருந்த ஒரு மிகப்பெரிய அச்சம்.
ஆனால் விடுதலைப் புலிகளுக்கு அந்த நேரத்தில் இருந்த உளவியல் தெம்பு என்பது, அவர்கள் தோல்வி அடைந்து சரணடையும் வரைக்கும் அவர்கள் பல கட்டுமாணங்கள் பலவற்றைக் கொண்ட ஒரு மரபுப் படையணியாகவே வலம்வரும் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆணந்தபுரச் சண்டைகளெல்லாம் முடிவடைந்து, முள்ளிவாய்காலுக்குள் அத்தனை புலிகளும் முடக்கப்பட்ட பொழுதிலும் கூட, வன்னியில் இருந்து கடைசியாக வெளிவந்த ஒளிப்படக்காட்சிகளில் விடுதலைப் புலிகளின் காவல்துறை வீரர் சீருடையில் நின்ற காட்சி பதிவாகியிருந்தது. அவர்களது ஊடகத் துறை தமது காரியங்களைக் கடைசிவரை செய்துகொண்டே இருந்தது.

என்னதான் நடந்தாலும் எதிரியை வெண்றுவிடும் பலம், எதிரி எத்தனை இலட்சம்தான் வந்தாலும் அவர்களை அழித்துவிடும் வல்லமை விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இருக்கின்றது என்கின்றதாக தமிழ் மக்களையும், எதிரியையும் குறிவைத்து விடுதலைப் புலிகள் தரப்பு மேற்கொண்டிருந்த உளவியல் நடவடிக்கையை, கால ஓட்டத்தில் விடுதலைப் புலிகள் தரப்பே உறுதியாக நம்ப ஆரம்பித்திருந்ததன் விளைவு இது என்று கூறலாம்.

சரி, இனி அடுத்த விடயத்திற்குச் செல்வோம்.

விடுதலைப் புலிகளின் மிக வெற்றிகரமான உளவியல் நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்திப்பதற்கு காரணமான மற்றொரு காரணி பற்றிப் பார்ப்போம்.

விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்திப்பதற்கு காரணமான மிக மிக முக்கியமான காரணி: கருணா.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளுள் ஒருவராக இருந்த கேணல் கருணா என்கின்ற தனி மனிதன் எவ்வாறு விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் முறியடிக்கக் காரணமாக இருந்தார்? 

Sunday, July 3, 2011

கரும்புலிகள் நாள் 2011/07/05

"இளைய மாவீரன் மில்லர் தியாகம்தான் இன்ப தமிழீழம் கொண்டுவரும்" 

www.wanniwin.blogspot.com