தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற் தற்கொலைப் போராளி கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்திருந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் கட்டடம் யாழ். ஆளுநரின் பணிப்பின் பேரில் தற்போது இடித்து அகற்றப்படுகிறது.
இந்தப் பாடசாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண ஆளுநரும் 2006 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுவரை யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாகக் கடமையாற்றியவரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, விடுதலைப்புலிகளை நினைவுகூரத்தக்க வகையில் அமைந்துள்ள சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கூற்றுக்கமைவாக, இவ்வாறான கட்டடங்கள் பாடசாலையில் இருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக இடித்து அகற்றுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
தாக்குதலில் சேதமடைந்த பாடசாலைக் கட்டடம் மில்லரின் நினைவாக அப்படியே இருந்தது.
தற்போது ஆளுநரின் உத்தரவுக்கு அமைய ஆளுநரினால் வழங்கப்பட்ட நிதியில் மேற்படி கட்டடம் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் நேற்று முன்தினம் முதல் இடிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, யாழ். குடாநாட்டிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னம் எதுவுமே இருக்கக் கூடாது என்பதற்காக மாவீரர் மயானங்கள், நினைவுத் தூபிகள், கல்லறைகள் மற்றும் நினைவுப் பூங்காக்கள் என்பன இடித்தழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment