Wednesday, August 10, 2011

நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர்


இராணுவத்தினர் வடமராட்சிக் கிழக்கு கரையோர நிலங்களைக் கைப்பற்றி தம்வசமாக்கும் முயற்சியில் மும்முரமாக செயற்படத் தொடங்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மருதங்கேணி, ஆழியவளை, வெற்றிலைக்கேணி மற்றும் உடுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது கரையோர நிலங்களை சட்டப்படி எழுதித் தருமாறு கேட்ட இராணுவத்தினர், அக்காணி, நிலங்களுக்கு எவ்வளவு பெறுமதி வேண்டுமானாலும் எம்மால் தரமுடியும். ஆனால் எங்களுக்கு அக்காணி நிலங்களை சட்டப்படி எழுதித் தாருங்கள் என கட்டாயப்படுத்தி கேட்டு வருகின்றனர்.
அவ்விடங்களுக்கு சமீபகாலத்தில்தான் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் கொட்டில்களிலும், தகரக் குடிசைகளிலும் தம் வாழ்நாட்களை கழித்துவரும் இவ்வேளையில், இராணுவத்தினரின் இப்புதிய முயற்சியால் அப்பிரதேச மக்கள் பீதியில் உள்ளனர்.
காணிகளைக் கொடுக்க மறுத்தால், இராணுவம் என்ன செய்யுமோ என்ற அச்சத்தில் என்ன செய்வதென தெரியாமல் வாழ்கின்றனர்.
கடந்த ஒரிரு வாரமாக ஒவ்வோர் வீடுகளுக்கும் சென்று காணிகளைக் கேட்கும் இராணுவத்தினருக்கு எதிர்வரும் காலங்களில் என்ன பதிலைச் சொல்வதென தெரியாமல் மக்கள் யோசித்தவண்ணமே தம் வாழ்க்கையை கழித்துவருவதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பதினொரு வருடமாக உயர் பாதுகாப்பு வலயமாகத் திகழ்ந்த நாகர்கோவில் கரையோரப் பிரதேசத்திற்கும் அண்மையில்தான் மக்களை மீள்குடியேற இராணுவம் அனுமதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment