Tuesday, August 16, 2011

இனி என்ன செய்யப் போகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு?

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈழத் தமிழ் மக்களின் பேராதரவான வாக்குகளால் தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
சிறிலங்கா அரசினால் முழு வீச்சாக மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள், கவர்ச்சிகள், சலுகைகள் எல்லாவற்றையும் தாண்டி தமிழ் மக்கள் தங்களுக்குத் தேவை தமிழர் தாயகம், தமிழர் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதனை மீண்டும் ஒரு முறை உலகிற்கு அழுத்தமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
இந்த வெற்றியானது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் அதையும் விட தமிழ்த் தேசியத்துக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகப் பார்க்கப்பட வேண்டும். தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கில் 17 உள்ளூராட்சி சபைகளையும், கிழக்கில் 3 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றியதன் மூலம் சிங்கள வல்லாதிக்கம் அல்லது அவர்களோடு இணைந்து இயங்குபவர்களுக்கு சரியான அடியாகவும் அமைந்திருந்தது.
ஆனால் தமிழ் மக்கள் அளித்த வெற்றியின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது தமிழ் மக்களுக்கு தங்களது சொந்த குடும்ப நலன்கள், சுயநலங்கள் எல்லாவற்றையும் துறந்து நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக புரிந்து கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாக குதறப்பட்ட சம்பவத்தினை எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் மறக்காது எம் தமிழினம்.
ஒரு இனத்துக்கு தேசிய அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பதனை தமிழ் மக்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடுகள் எப்படியாக கட்டிக் காக்கப்பட்டது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு எந்தளவுக்கு தமிழர் தாயகப் பிரதேசம் பல்வேறு வழிகளிலும் சிங்களவர்களினால் சிதைக்கப் பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இப்படியாக ஒட்டு மொத்த தமிழினத்தின் கோபம் தான் சிங்கள அரசும் அதன் அருவருடிகளும் தமிழ் மண்ணில் தூக்கிஎறியப்பட்டதன் காரணம்.
போர் முடிவடைந்து தோற்கடிக்கப்பட்ட ஒரு தேசத்தில் எப்படியான அடக்கு முறைகளும் சீரழிவுகளும் சுரண்டல்களும் இடம்பெறுமோ அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் இன்றைய யாழ்ப்பாணம். தமிழ் இளைஞர்களின் போராட்ட குணத்தை, தமிழ் உணர்வுகளை மழுங்கடித்து அதனை முற்றிலும் இல்லாமல் செய்து விடும் தெளிவான நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது சிங்கள அரசு.
இதற்காக தனது அருவருடிகளைப் பயன்படுத்தி இளைய சமுதாயத்தின் உணர்வுகளை அப்படியே அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை சச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது. விலை போன தமிழ்க் கட்சிகளின் கைக்கூலிகள் மூலம் ஆபாசப் படம் காட்டல், விபச்சாரத்தை ஊக்குவித்தல், தாராளமாக போதை மருந்துகளை விநியோகித்தல் போன்ற இழிவான நடவடிக்கைகளின் மூலம் இளைஞர்களின் மனதை திட்டமிட்டு திசை திருப்பி வருகின்றது சிங்கள அரசு.
இதன் இன்னொரு பக்கமாக தமிழ் மக்களின் பாரம்பரியமான கலாச்சார சின்னங்களை அழித்தல் அல்லது உருமாற்றல், தமிழர் தாயகப் பகுதிகளில் பொருளாதார ரீதியாகச் சுரண்டல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவுதல் போன்ற செயற்பாடுகளையும் சச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது.
இப்படியாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் தலை விரித்தாடும் சிங்களத்துக்கு தமிழ் மக்கள் கொடுத்த பதிலடி தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள். இன்னொரு முக்கியமான விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பு சிங்கள அரசால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் தங்களுக்கு உள்ள ஒரே தெரிவாக கூட்டமைப்பை கருதுகிறார்கள். இதனால் பலத்த ஆதரவை இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் முக்கியமான ஒரு இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. இதனால் அவர்களுக்கான பொறுப்புக்களும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கூட்டமைப்பு இனியாவது தனக்கான பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழர் தாயகப் பிரதேசங்களில் அவர்களை ஒழுங்கு படுத்தும் கட்டமைப்புக்கள் சீர்குலைந்து போயுள்ளன. அவற்றை சீரமைக்க கூட்டமைப்பு முழுமையாகப் பாடுபட வேண்டும்.
முக்கியமாக அறிவுஜீவிகள், புலமைசார் திறனாய்வாளர்கள், கல்வியலாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரை உள்வாங்கி தமிழ் மக்களுக்கான அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, கலைக் கொள்கை போன்ற கட்டமைப்புக்களை மீள உருவாக்க வேண்டும். புலம்பெயர் சமூகத்தை தாயகத்துடன் இணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும்.
புலத்தில் உள்ள தமிழ் மக்களின் உதவியுடன் இன்னமும் வன்னிப் பெருநிலப்பரப்பில் சின்னம் சிறு கொட்டகைகளுக்குள் அடைந்து கிடந்தது பல்வேறு உடலியல் உபாதைகள், உளவியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தகரக் கூடாரங்களில் வாழும் மக்களுக்கு பருவ மழைக் காலத்துக்கு முன்னர் ஒழுங்கான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அங்குள்ள மக்கள் முன்னர் வாழ்ந்ததைப் போன்று கௌரவமாக வாழ அவர்கள் வாழும் பிரதேசங்களில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அங்கு வசிக்கும் சிறார்களின் இழந்து போன கல்வியை மீட்டு எடுக்க யாழ் பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக யாழ் பல்கலைக் கழக சமூகம் மற்றும் யாழில் கல்வித்தரத்தில் சிறப்பான பாடசாலைகளில் பயிலும் மாணவர்களைக் கொண்டு வன்னிப் பகுதியில் வறுமையினால் பாடசாலை செல்ல வழியின்றி தவிக்கும் மீள்குடியேறிய மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியறிவுள்ள சமூகமொன்றைக் கட்டமைக்க கூட்டமைப்பு இப்படியான செயற்பாடுகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து மிகப் பிரதானமாக தமிழ் கூட்டமைப்பில் உள்ள வயதானவர்கள் பெருந்தன்மையோடு விலகி துடிப்புள்ள இளைஞர்கள் உள் வர வழி வகை செய்ய வேண்டும். ஏனெனில் இளையவர்கள் தான் முழுவீச்சுடன் கூடுதலான நேரங்களில் மக்களுடன் களத்தில் நின்று பணி புரிவார்கள். கூட்டமைப்பின் பழம் பெரும் தலைவர்கள் ஆலோசகர்கள் என்ற நிலையை வகிக்கலாம்.
கூடுதலான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியதன் மூலம் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டால் வடக்கு கிழக்கில் அழிந்து போன உட்கட்டமைப்பு வசதிகளை சபைகளின் மூலம் திறம்பட மேம்படுத்தலாம். இவற்றை விரைந்து மேற்கொள்ள கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்று முக்கியமானது தான். ஆனால் அதனையும் தாண்டி இன்றைய நிலையில் எமது மக்கள் அடிப்படைக் கல்வி, பொருளாதாரத் தேவைகள் மற்றும் உயிர் வாழத் தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து கொடுக்கும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
மஹிந்தருடன் இணக்க அரசியல் நடத்தி சில்லறைத் தீர்வுகளைப் பெறும் முயற்சியில் வெட்டியாகப் பொழுதைக் கழிக்காமல் மேற்சொன்ன தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். மீண்டும் ஒரு தரம் தமிழ் மக்கள் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் அவர்களை ஏமாற்றாமல் செயற்படுமா கூட்டமைப்பு? இதற்கு இனிவரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment