Saturday, August 20, 2011

முல்லைத்தீவில் இறுதிப்போர் நடந்த இடங்களில் மீள்குடியமர்வுக்கு அனுமதியில்லை (வீடியோ இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட சில கிராம அதிகாரி பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சிறிலங்கா அரசின் இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம அதிகாரி பிரிவுகளில் மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக முல்லைத்தீவின் சில பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை கோம்பாவில் என்ற இடத்தில் மீளக்குடியேற்றவுள்ளதாக முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி கூறியிருந்தார்.

கோம்பாவில் பகுதியில் காடுகளை அழித்து தற்காலிக குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. அந்த இடத்தை ஐ.நாவின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினய் நந்தி அண்மையில் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஆனால் இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்ற சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் , போர்க்குற்றங்கள் குறித்த சாட்சியங்களை முற்றாக அழிப்பதற்கே சிறிலங்கா அரசு அங்கு மீள்குடியமர்வுக்கு அனுமதி மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலத்துக்கடியில் புதைந்த போயுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியே வந்து விடுமோ என்ற அச்சத்தினாலேயே சிறிலங்கா அரசு இவ்வாறு செயற்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


No comments:

Post a Comment